அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த முடிகொண்டான் கிராமத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், வரலாற்று மீட்புக்குழு சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் பண்டைய நாணயங்கள் பலவும், குறிப்பாக மூவேந்தர்களின் நாணயங்கள், சங்க காலத்தின் வரலாற்றையும், பொருளாதாரத்தையும் விளக்கும் வகையில், பொன், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட முத்திரைக் காசுகளை காட்சிப்படுத்தி தமிழக வரலாற்றையும், பொருளாதாரத்தை விளக்கினர்.ரோமானியக் காசுகள், டச்சுக்காரர்கள் வெளியிட்ட நாணயங்கள் போன்ற வெளிநாட்டு நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்துள்ளன. இவை வணிக தொடர்புகளையும், பொருளாதார பரிமாற்றங்களையும் காட்டுவதை விளக்கினர்.
குடியரசு இந்திய நாணயங்கள் பணத்தாள்கள் உலக பணத்தாள்களை காட்சிப்படுத்தி அதன் வரலாற்றை விளங்கினர். வரலாற்று மீட்பு குழு இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், குடியரசு இந்தியா நினைவார்த்த நாணயங்கள் சேகரிப்பாளர் கமலக்கண்ணன், வரலாற்று ஆசிரியர் அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் அவரவர் சேகரிப்பினை காட்சி படுத்தி விளக்கினர்.
வரலாற்று மீட்புக்குழு தலைமை ஒருங் கிணைப்பாளர் தங்க.சண்முககநதரம் தலைமை வகித்து பேசினார். அரியலூர் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை முன்னான் தலைவர் க.தமிழ்மாறன் கலந்து கொண்டு, தங்க.சண்முகசுந்தரம் எழுதிய நூலை மதிப்புரை வழங்கினார்.
தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் இரா.ரகுநாதன், ஜெயங் கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவன தாளாளர் முத்துக் குமரன், திருவள்ளுவர் ஞான மன்ற நிறுவனர் சி.பன்னீர்செல்வம், தமிழப் பல்கலைக்கழக அரிய கையெழுத்துச் சுவடித் துறை இணைப் பேராசிரியர் த. ஆதித்தன், வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரி முதல்வர்(பொ) து.சேகர், காந்தியவாதி இரா.நடராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
முதன்மை விருந்தினர் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் (பொ)சி.அமுதா பேசுகையில், நம் முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ள வரலாற்று தொன்மங்களையும் நாம் வாழும் பூமியையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இயற்கையை நாம் பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும் என்றார். பின்னர் அவர், மறைந்த பாடலாசிரியர் மருதகாசி, மொழிப்போர் தியாகி சின்னசாமி, மறைந்த முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும் சுதந்திர போராட்ட தியாகியுமான டி.கே.சுப்பையா, பேச்சாளர் தென்கச்சி சுவாமிநாதன் உள்ளிட்டோருக்கான விருதுகளை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கினார். மேலும், சிறந்த மண் காப்பாளர்,தமிழ்ப்பற்றுக்கொண்டவர்,
கலை,,புலமை, இயற்கை ஆர்வலர்கள் என 200 பேருக்கு விருதுகளையும், வரலாறை மீட்கும் வகையில் சிறிய கல் உரல், உலக்கைகளை வழங்கி கௌரவித்தார்.
0 Comments