தமிழ்நாட்டில் சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து பலரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகிறார்கள். இதனால் ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கும் நிர்வாகிகளுக்கும், புதிய நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் பல அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.
அந்தவகையில், திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கீழப்புலிவார் சாலை, வேதாத்ரி நகர், பகுதியில் வசித்து வருபவர் பாலு. இவருடைய மனைவி பவானி. பாலு என்பவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சி பணிகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்திலையில், நேற்று இரவு சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி செய்யக்கூடிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகள் இடம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக நிர்வாகிகள் நிர்மல், சதீஷ், செளகத், சுதாகர், கோபி, மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர்கள் என 7 நபர்கள், நேற்று இரவு பாலு வீட்டில் மது போதையில் சென்று பாலுவின் மனைவி பவானியிடம் தகாத வார்த்தையில் பேசியும், கொலை மிரட்டல் விடுத்தும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாலு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பதிவு செய்து இன்று திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் தவெக நிர்வாகிகள் உட்பட 7 பேர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் பவானி புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்த பாலு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
நான் அரசியலில் பல ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். அண்மையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கரிகாலன் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக நிர்வாகி நிர்மல், சதீஷ், செளகத் ஆகியோர் ஏற்கனவே என்னிடம் தொலைபேசி மூலமாக பேசி கட்சியில் சீனியர் நாங்கள். எங்களை மதிக்காமல் நீ செயல்படுகிறாய், இது நல்லதல்ல என மிரட்டினார்கள். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நான் எனது பணியை செய்து வந்தேன். இந்நிலையில் நேற்று இரவு எனது வீட்டில் மனைவி பவானி தனியாக இருக்கும்போது, மது போதையில் காரில் சென்று தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். இவற்றை கண்டித்து இன்று கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளேன். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், இதுபோன்று சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க தலைமைக் கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பாலுவின் மனைவி பவானி கூறுகையில்;
நான் தனியாக வீட்டில் இருக்கும்போது, ஏழு நபர்கள் மது போதையில் வந்து என்னையும் என் கணவரையும் தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்து எச்சரிக்கை விடுத்து சென்றனர். மேலும் அவர்கள் அனைவரும் மது போதையில் இருந்தார்கள் கையில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தார்கள். ஆகையால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.



0 Comments