உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலராக பணி புரிபவர் மருத்துவர் ஆர். ரமேஷ்பாபு (55). அவரது மனைவி சர்மிளா. 2002 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் நாகாதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணியில் சேர்ந்த மருத்துவர் ரமேஷ்பாபு, மெலட்டூர், தஞ்சாவூர், சாலியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றியுள்ளார்.
பின்னர் உணவு பாதுகாப்பு துறையில் திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நியமன அலுவலராகவும் தற்போது திருச்சி மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சர்மிளா ஏதும் பணியாற்றவில்லை குடும்ப தலைவியாக உள்ளார். இந்நிலையில், ரமேஷ்பாபு மற்றும் சர்மிளா இருவர் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு (லஞ்ச ஒழிப்பு) பிரிவு போலீஸôர் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த, 2018ம் ஆண்டு வரை, டாக்டர் ரமேஷ்பாபு மற்றும் அவரது மனைவி பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு, 18.64 லட்சம் ரூபாயாக இருந்தது. பின் 2018 முதல் 2021 காலகட்டத்தில், டாக்டர் ரமேஷ்பாபு சொத்து மதிப்பு, 2.36 கோடி ரூபாய். அவரது வருவாய், குடும்ப செலவு, கடன்கள் உள்ளிட்ட அனைத்தையும் கணக்கிட்டு பார்த்ததில், மேற்கண்ட காலகட்டத்தில் பொது ஊழியரான டாக்டர் ரமேஷ்பாபு மற்றும் அவரது மனைவி சர்மிளா ஆகியோர், வருமானத்துக்கு அதிகமாக 1.43 கோடி ரூபாய்க்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்த்துள்ளது ஆதாரங்களுடன் தெரிய வந்தது. இதையடுத்து, திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு மீதும், அவரது மனைவி சர்மிளா மீதும், லஞ்ச ஒழிப்பு போலீசார், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments