தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ரூ.236 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள தந்தை பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து அங்கு தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அதற்கு எதிர்புறம் ரூ. 128.94 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்து, அண்ணா உருவசிலையை திறந்து வைத்தார்.
அதன் பின்னர் ரூ.408.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உருவ சிலையை திறந்து வைத்தார். பின்னர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைத்து பேருந்து முனையத்தை முழுவதுமாக சுற்றிப் பார்த்து பொது மக்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து பேருந்து முனையத்தின் முதல் தளத்தில் நகர பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.463.30 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, ரூ. 276.95 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து ரூ.830.35 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரையாற்றினார்.
முன்னதாக விழா மேடை ஏறியதும், இந்திய எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வீர வணக்கம் செலுத்துமாறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். அதனையடுத்து ஒரு நிமிடம் அனைவரும் அமைதியாக எழுந்து நின்று வீர வணக்கம் செலுத்தினர்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் விழா மேடையில் பேசுகையில்,...
நான்காண்டு நிறைவில் செய்த சாதனைகளை பார்க்கும் போது எனக்கே மழைப்பாக இருந்தது. மதுரையில் ஒத்த செங்கல் எய்ம்ஸ் போல் இல்லாமல் 6 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது, ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு அமைய தொடக்கம் இந்த திருச்சியில் இருந்து தான் தொடங்கியது. அப்போது அந்த விடியலுக்கான முழக்க மாநாட்டில் ஏழு வாக்குறுதிகளை அளித்தேன்.
இதில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளோம். 9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளோம். இது இந்தியாவில் முதல் மாநிலம் நாம் தான். சமூக நீதி அரசை உருவாக்கி உள்ளோம். எல்லாருக்குமான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி திகழ்ந்து வருகிறது. வரும் காலங்களில் இதை விட பெரிய சாதனைகள் படைப்போம். இதை தான் நம் எதிரிகளால் தாங்க முடியவில்லை. திராவிட மாடல் 2.0 இனி தான் Loading. இனி நாம் போகும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும், ராக்கெட் வேக வளர்ச்சியை வரும் காலத்தில் பார்ப்பீர்கள் என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ் எஸ் சிவசங்கர், ரகுபதி, மெய்ய நாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 Comments